உன்னைத் துதிக்க அருள் தா

 

உன்னைத் துதிக்க அருள் தா

உன்னைத் துதிக்க அருள் தா

‘தமிழ்த் தியாகையர்’ என்று கர்னாடக இசையுலகில் போற்றப்படும் பாபநாசம் சிவன் எழுதிய முதல் கீர்த்தனை ‘உன்னைத் துதிக்க அருள் தா’ எனத் தொடங்குவதாகும்.  திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் தியாகராஜர் (தியாகேசர்) மீது இதை எழுதினார். 1911ஆம் ஆண்டு அக்கோயில் தேரோட்டத்தின் போது எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இசையுலகில் இக்கீர்த்தனை மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. பல பாடகர்கள் இதைப் பாடியுள்ளனர்.

‘பாபநாசம் சிவன் கீர்த்தன மாலை – முதல் பாகம்’ (2006) நூலில் இடம்பெற்றுள்ள வடிவம் இது:

பல்லவி

உன்னைத்துதிக்கவருள் தா இன்னிசையுடன்

உன்னைத்துதிக்கவருள் தா

அனுபல்லவி

பொன்னைத்துதித்து மடப் பூவையரையுந்துதித்து

சின்னத்தனமடைந்து சித்தமுங்கலங்கிடாமல்                (உன்னைத்)

சரணம்

பொன்னாட்டினுஞ் சிறந்த புண்ணியக் கமலாலய

நன்னாட்டினில் விளங்கி நண்ணு மஜபாநடநத்

தன்னாட்டியத்திறத்தில் நாட்டமொடு வாட்டமற

சொன்னாட்டாரூரர்தோழனே ஸுந்தரத்யாகேசனே       (உன்னைத்)

000

தமிழ்ச் செய்யுள் மரபுக்குரிய புணர்ச்சி இலக்கணம் பிறழாமல் எழுதியுள்ள இக்கீர்த்தனை ஸ்வரத்திற்கு ஏற்பச் சீர் பிரித்து நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு செய்யுளைச் சந்தி பிரித்து வாசிப்பது போலத் தெளிவுக்காக இதையும் பிரித்துக் காட்டலாம்.

சந்தி பிரித்த வடிவம்:

பல்லவி

உன்னைத் துதிக்க அருள் தா –  இன்னிசையுடன்

உன்னைத் துதிக்க அருள் தா

அனுபல்லவி

பொன்னைத் துதித்து மடப் பூவையரையும் துதித்து

சின்னத்தனம் அடைந்து சித்தமும் கலங்கிடாமல்                (உன்னைத்)

சரணம்

பொன்னாட்டினும் சிறந்த புண்ணியக் கமலாலய

நன்னாட்டினில் விளங்கி நண்ணும்  அஜபா நடநத்

தன்னாட்டியத் திறத்தில் நாட்டமொடு வாட்டமற

சொன்னாட்டு ஆரூரர் தோழனே ஸுந்தர த்யாகேசனே       (உன்னைத்)

000

உன்னைத் துதிக்க அருள் தா

தியாகேசரை விளித்து அவரிடமே ‘உன்னைத் துதிக்க அருள் தா’ எனக் கேட்பதாக இது அமைந்திருக்கிறது. ஏன் அத்தகைய அருள் வேண்டும் என்பதற்கான காரணம் அனுபல்லவியில் அமைகிறது. கீர்த்தனையில் ஒலிப்பது ஆண் குரல். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என மூவாசைகளே மனிதரின் (ஆண்கள்!) துன்பத்திற்குக் காரணம் என்பது பொதுக்கருத்து. அதற்கு இணங்கி  பொன்னாசை, பெண்ணாசை ஆகிய இரண்டும் தன்னை அற்பனாக்கிவிடும் என்றும் தன் சித்தத்தைக் கலக்கிவிடும் என்றும் ஓர் ஆண் கூறுவதாக அனுபல்லவி அமைகிறது. பெண்களைத் தூற்றும் சித்தர் மரபின்படி இதை அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். ‘மடப் பூவையர்’ என்பதை இன்றுள்ள பாடகர்கள், குறிப்பாகப் பெண்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

சரணம் முழுவதும் தியாகேசரின் பெருமையைச் சொல்லி அவரை விளிக்கிறது. எத்தனை முறை விளி வருகிறது என்பதில் தெளிவில்லை. இரண்டு எனலாம். மூன்று, நான்கு, ஐந்து என்றும் சொல்லலாம். அவ்வாறு கொள்வதற்கு ஏற்ற வகையில் சரணத்தின் அடிகள் அமைந்துள்ளன. மொத்தம் நான்கு அடிகள். கடைசி அடியில் வரும் இரண்டு விளிகளைத் தெளிவாக அறிய முடிகிறது. முதல் மூன்று அடிகளின் இறுதியையும் விளியாகக் கொள்ளலாம். அல்லது அடுத்த அடியோடு இயைக்கலாம். இரண்டுக்கும் வாய்ப்பிருக்கிறது.

‘பொன்னாட்டினும் சிறந்த புண்ணியக் கமலாலய’ என்பது முதல் அடி. அதன் இறுதி விளி. திருவாரூர் கோயில் குளத்திற்குப் பெயர் கமலாலயம். இக்குளத்திற்கே புராணம் உண்டு. ‘கமலாலய புராணம்’ என்னும் நூலை மறைஞான சம்பந்தர் எழுதியுள்ளார். கமலாலயக் குளத்தைக் கொண்டவன் ஈசன் கமலாலயன். கமலாலயன் என்பது அண்மைவிளியாகக் ‘கமலாலய’ என்றாகும். சேய்மை விளி ஏற்றால் ‘கமலாலயா’ என்றோ ‘கமலாலயனே’ என்றோ ஆகும். இக்கீர்த்தனையில் அண்மை விளி ஏற்கிறது எனக் கொள்ளலாம். ‘பொன் நிறைந்த நாட்டை விடவும் (குபேரனின் அழகாபுரியோ?) சிறந்ததும் புண்ணியத்தைத் தரக்கூடியதுமாகிய கமலாலயம் என்னும் குளத்தைக் கொண்டவனே’ என்று இதற்குப் பொருள் சொல்லலாம்.

அடுத்த அடி முடிவில் ‘நடநத்’ என்னும் இறுதிச்சொல்லில் வரும் ‘த்’ ஆகிய ஒற்றைத் தவிர்த்துவிட்டு ‘நன்னாட்டினில் விளங்கி நண்ணும் அஜபா நடந’ என்று கொண்டால் இதுவும் விளிதான். இந்த ஒற்று நூலின் முதல் பதிப்பில் இருக்கிறதா, பின்னர் சேர்க்கப்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். திருவாரூர் ஒருகாலத்தில், மனுநீதிச் சோழன் காலத்தில் தலைநகராக இருந்தது என்று கூறப்படுகிறது. ஆகவே அது ‘நன்னாடு’ ஆகிறது. திருவாரூரில் தியாகேசர் ஆடுவது அஜபா நடனம். மூச்சை உள்ளிழுப்பதாலும் வெளியே  விடுவதாலும் ஏற்படும் அசைவுதான் அஜபா நடனம். அதைப் பற்றிச் சில கதைகள், விளக்கங்கள் கூறப்படுகின்றன. அவை இங்கே வேண்டாம்.  ‘அஜபா நடந’ என்பதை ‘அஜபா நடனமிடுபவனே’ என இதையும் அண்மை விளியாக எடுத்து ‘நல்ல ஊராகிய திருவாரூரில் கோயில் கொண்டு பொருத்தமான அஜபா என்னும் நடனத்தை ஆடுபவனே’ எனப் பொருள் கொள்ளலாம்.

‘தன்னாட்டியத் திறத்தில் நாட்டமொடு வாட்டமற’ என்பது மூன்றாம் விளி. அடுத்த அடி ‘சொன்னாட்டு’ எனத் தொடங்கினாலும் ‘வாட்டமற’ என்பதில் ‘ச்’ மிகவில்லை. ஆகவே இதை விளி எனக் கொள்வதில் தடையில்லை. வலிந்து எடுத்துக் கொள்வது போலத் தோன்றினாலும்  ‘வாட்டமற்றவனே’ என்பதன் மரூஉவாக ‘வாட்டமற’ என வருவதாகக் கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். ஆகவே ‘மிகுந்த ஆர்வத்தோடு நாட்டியமாடும் தன் நிலையில் ஒருபோதும் சோர்வுறாதவனே’ எனப் பொருள் சொல்லலாம்.  அடுத்து வரும் இருவிளிகளும் தெளிவானவை. ‘சொன்னாட்டு ஆரூரர் தோழனே’ என்பதன் பொருள்  ‘சொல்லைச் சிறக்கச் செய்த (நாட்டுதல்) சுந்தரர் (ஆரூரர்) தோழனே’ என்று வரும். கடைசி விளி ‘ஸுந்தர த்யாகேசனே’  என்பது. ‘பேரழகு கொண்ட தியாகேசனே’ எனலாம்.   இப்போது சரணத்தின் பொருளை முழுதாகப் பார்க்கலாம்.

‘பொன் நிறைந்த நாடாகிய அழகாபுரியை விடச் சிறந்ததும் புண்ணியத்தைத் தரக்கூடியதுமாகிய கமலாலயக் குளத்தைக் கொண்டவனே! நல்ல ஊரான திருவாரூரில் கோயில் கொண்டு பொருத்தமான அஜபா நடனத்தை ஆடுபவனே! மிகுந்த ஆர்வத்தோடு நாட்டியமாடும் தன் நிலையில் ஒருபோதும் சோர்வுறாதவனே! சொல்லைச் சிறக்கச் செய்த  சுந்தரர் தோழனே! பேரழகு கொண்ட தியாகேசனே!’

பல்லவி, அனுபல்லவியோடு இயைத்துச் சுருக்கமாக இப்படிக் கூறலாம்: ‘உன்னை போற்றி வழிபட அருள் தா! இன்னிசையுடன் உன்னைப் போற்றி வழிபட அருள் தா! பொன்னாசை கொண்டும் மடமைக் குணத்தைக் கொண்ட பெண்கள் மீது ஆசைப்பட்டும் அற்பத்தனம் உள்ளவனாகி மனக் கலக்கம் ஏற்படாமல் உன்னைப் போற்றி வழிபட அருள் தா! கமலாலயனே, அஜபா நடனம் ஆடுபவனே, தன் நிலையில் சோர்வற்றவனே, சுந்தரர் தோழனே, தியாகேசனே! உன்னைப் போற்றி வழிபட அருள் தா!’

சரணத்தின் இறுதியில் ஆரூரர் தோழனே, தியாகேசனே எனத் தெளிவுடன் அமையும் இருவிளிகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை அதற்கியைபு படுத்திக் கீர்த்தனைக்குப் பொருள் கொண்டால் கீழ்வருமாறு பொருள் அமையும்.

‘உன்னை போற்றி வழிபட அருள் தா! இன்னிசையுடன் உன்னைப் போற்றி வழிபட அருள் தா! பொன்னாசை கொண்டும் மடமைக் குணத்தைக் கொண்ட பெண்கள் மீது ஆசைப்பட்டும் அற்பத்தனம் உள்ளவனாகி எனக்கு மனக் கலக்கம் ஏற்படாமல் உன்னைப் போற்றி வழிபட அருள் தா! பொன் நிறைந்த நாடாகிய அழகாபுரியை விடச் சிறந்ததும் புண்ணியத்தைத் தரக்கூடியதுமாகிய கமலாலயக் குளத்தை உடைய நல்ல ஊராம் திருவாரூரில் கோயில் கொண்டு, பொருத்தமான அஜபா நடனத்தை மிகுந்த ஆர்வத்தோடு சோர்வுறாமல் ஆடும், சொல்லைச் சிறக்கச் செய்யும் வகையில் தேவாரம் பாடிய  சுந்தரர் தோழனே! பேரழகு கொண்ட தியாகேசனே! உன்னைப் போற்றி வழிபட அருள் தா!’

000

உன்னைத் துதிக்க அருள் தா

ஒரு கீர்த்தனையை வெவ்வேறு பாடகர்கள் பாடும்போது சிறுசிறு பாட வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. இணையத்தில் கிடைக்கும் காணொலிகள் சிலவற்றைக் கேட்டேன். அவற்றில் காணப்படும் ஒருசில பாட வேறுபாடுகளைக் காணலாம். பல்லவியில் ஒரே ஒரு பாட வேறுபாடு.  ‘இன்னிசையுடன்’ என நூலில் உள்ளது. பெரும்பாலானோர் அப்படியே பாடுகின்றனர்.  ஒருவர் மட்டும் ‘இன்னிசையொடு’ எனப் பாடுகிறார். அனுபல்லவியில் வேறுபாடு ஏதுமில்லை.

உன்னைத் துதிக்க அருள் தா

சரணத்தின் தொடக்கமாகிய ‘பொன்னாட்டினும் சிறந்த’ என்பதைத் ‘தென்னாட்டினில் சிறந்த’ என ஒருவர் பாடுகிறார்.  ‘கமலாலய’ என்பதைப் பெரும்பாலோர் சரியாகப் பாட ஒருவர் மட்டும் ‘கமலாலயா’ எனச் சற்றே நீட்டுகிறார். ‘நன்னாட்டினில் விளங்கி’ என்பதை  ‘நன்னாட்டினில் விளங்கும்’ என ஒருவர் பாடியுள்ளார். ‘விளங்கி’ என்பதே பொருள் பொருத்தம் உடையது.  ‘அஜபா’ எனப் பெரும்பாலோர் பாடுவதில்லை. எல்லோருக்கும் ‘மஜபா’ தான்.  அவ்விடத்தில் பாடகர்களுக்குச் சிறுகுழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. ‘நண்ணு மஜபா’ என்று கீர்த்தனையில் உள்ளது. இதைப் பிரித்து ‘நண்ணும் அஜபா’ என்றாக்க வேண்டும். அல்லது சேர்த்துப் பாடுவதானால் மகர ஒலியை  ‘ம்அ’ என ஓசை வருவது போல இயைக்க வேண்டும். சிலர் ‘மயபா’ என்று பாடுவதையும் கேட்க முடிகிறது.  கடைசி அடியை அனைவரும் ‘ஆரூரர் தோழனே’ எனப் பாட ஒருவர் ‘ஆரூரன் தோழனே’ என்கிறார். சுந்தரரை ‘ஆரூரர்’ எனச் சொல்வதே மரபு. பாட வேறுபாடுகள் காரணமாக ஸ்வரப் பிறழ்வு இல்லை. தாளம் தப்புதலும் இல்லை. எனினும் சிலவற்றால் பொருள் குழப்பம் ஏற்படுகிறது.

‘கீர்த்தன மாலை – முதல் பாகம்’ நூலின் 2006ஆம் ஆண்டுப் பதிப்பே என் பார்வைக்குக் கிடைத்தது. ஆனால் இந்நூல் பாபநாசம் சிவன் அவர்கள் வாழும் காலத்திலேயே பல பதிப்புகள் வந்திருக்கிறது. முதல் பதிப்பு 1934ஆம் ஆண்டு. அப்பதிப்புக்கும் 2006ஆம் ஆண்டுப் பதிப்புக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்தால் இன்னும் சில தெளிவுகள் கிடைக்கும் என்றும் தோன்றுகிறது.

000

உன்னைத் துதிக்க அருள் தா

பயன்பட்ட நூல்: ப்ரஹ்மஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்கள் கீர்த்தன மாலை முதல் பாகம், வெளியீடு: ருக்மணி ரமணி, சென்னை, 2006, மறுபதிப்பு.

—–

நன்றி: இந்து தமிழ் திசை, 10-01-2024